Movie Tickets revised again in TN
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வில் தமிழக அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. ஒரே வளாகத்தில் 2க்கும் மேல் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும், அவை அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்து கட்டணங்களை நிர்ணயித்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.
தற்போது சென்னை மாநகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசு அண்மையில் குறைத்துள்ள தியேட்டர்களுக்கான புதிய கட்டண விகிதங்களை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவித்துள்ளதுடன், சிறப்பாக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வசதிகளுடன், குளிர்சாதன வசதிகளையும் கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடைய வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், தியேட்டர் வளாகங்களுக்கான கட்டணங்களை பின்வருமாறு திருத்தி முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
மொத்தம் 3 விகிதங்களில் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் விகிதம்: 2 தியேட்டர்கள், அதற்கும் கூடுதலாக உள்ள, ஏசி வசதி உடைய தியேட்டர்கள், எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800க்கும் குறைவில்லாத எண்ணிக்கை உள்ள இருக்கைகள், இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல் இருத்தல்;
இருக்கை வரிசைகளுக்கு இடையிலா இடைவெளி 1050 மில்லி மீட்டர் குறையாமல் இருத்தல், நூறு சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலி அமைப்பு, மூன்று பிரதான ஒலிபெருக்கிகள், சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை, தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி, குளிர்சாதன வெளிக்கூடம், கம்ப்யூட்டர் டிக்கெட் முறை, இணையதள டிக்கெட் முறை, வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதி உடைய தியேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 95 டிக்கெட் கட்டணமாக இருக்கும்.
2வது விகிதம்: இரண்டுக்கும் அதற்கு அதிகமாக உள்ள தியேட்டர்கள், மொத்தம் 800க்கு குறைவில்லாத இருக்கைகள், நூறு சதவீத சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி மற்றும் முதல் வகையில் உள்ள 15ல் ஏதாவது ஐந்து வசதிகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்த பட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 85 ஆக டிக்கெட் இருக்கும்.
கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், உணவு நிலையத்தையும், குளிர்சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின் உயர்ந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 ஆகவும் இருக்கும்.
தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்தவெளி தியேட்டரான பிரார்த்தனாவில் தற்போது உள்ள நடைமுறைப்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Thatstamil.com
2 Comments:
அப்படின்னா படம் வெளி வந்த முதல் நாள் இஷ்டத்துக்கு டிக்கட் வில வெச்சு விக்கறது இனி முடியாதா?
தமிழ் பேர் கொண்ட படத்துகெல்லாம் இன்னும் வரி விலக்கு இருக்குதானே?
வருகைக்கு நன்றி Chinna Ammini !!
உங்க கேள்விகளுக்கு பதில் :
ஆமாம் & ஆமாம்.
Post a Comment
<< Home