Sunday, November 02, 2008

PMK மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை?

இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக திமுக நடவடிக்கைகள் எடுத்ததைப் போல பாமகவும் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ஈழத்தமிழர் பிரச்சனை திசை திருப்பப்பட்டு விட்டது. அனைத்து கட்சி தீர்மானங்கள் கிடப்பிலே போடப்பட்டு விட்டன. நிதி திரட்டல் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வாகாது என்று கூறியிருந்தார். முதல்வர் கருணாநிதியையும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ராமதாஸுக்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கையிலே 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதும் ஒன்று. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே அந்த கருத்துக்கு மாறாக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

அந்த தீர்மானத்திற்கு இணங்க திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்னிடம் பதவி விலகல் கடிதத்தை தந்தார்களே தவிர, மற்ற கட்சி எம்.பி.க்கள் தரவில்லை.

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே எம்.பி.க்கள் பதவி விலகல் முடிவுக்கு மாறாக இருந்த நேரத்தில் நாமே தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது என்றும், திசைதிருப்பப்பட்டு விட்டது என்றும் சொல்லிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

நிதி திரட்டுவது குறித்தும் ராமதாஸ் குறைபட்டுக் கொண்டுள்ளார். இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும் அவதிப்படும்போது அவர்களுக்கு நம்மால்ஆன உதவியை செய்ய வேண்டும் என்று தான் இந்த முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம்.

என்னதான் செய்வது ..

ஆனால் அதற்கும் குறை கண்டால் என்னதான் செய்வது. அந்த பணியிலே ஈடுபடாவிட்டால் அதைக்கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள்.

இந்த நிவாரண உதவிகள் செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமாக அனுப்பப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இலங்கை அரசு மூலமாக அனுப்புவோம் என்று கூறவில்லை.

அனைத்து கட்சி கூட்ட தீர்மானம் தோல்வி என்று கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அளித்த உறுதிமொழிகள் என்ன? மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசில் எப்படி திமுக ஒரு அங்கமோ அதைப்போலவே பாமகவும் அதிலே ஒரு அங்கம். அவருடைய மகனே அதில் முக்கியஅமைச்சராகத் தான் இருக்கிறார். எனவே என்னைப்போலவே மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு டாக்டர் ராமதாசுக்கும் உண்டு.

எல்லையை உணர வேண்டாமா?

மத்திய அரசுக்கு என்று உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தான் அவர்களும் இயங்கவேண்டி உள்ளது. இன்னொரு நாட்டு பிரச்சனையிலே பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிட முடியும். மத்திய அரசின் நிலைமையையும், அதிகார எல்லையையும் நாம் உணர வேண்டாமா?

எனவே இலங்கையிலே உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிட நாம் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ள அனைத்து கட்சியினரையும் தமிழ் மக்களையும் வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

1 Comments:

At 8:16 PM, Anonymous Anonymous said...

கலைஞரின் கேள்வி சாதாரண பாமரனாய் இருந்தால் மிகவும் சரி. ஆனால் தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை மறந்து பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

ராமதாஸ் கேட்பது முதல்வர் என்ற முறையில் நிர்பந்தபடுத்தி மத்திய அரசிடம் சாதித்தது என்ன என்பதுதானே தவிர கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அல்ல.

இலங்கை பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வை மதிக்க செய்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்ட "சின்கூரிலிருந்து டாட்டாவை விரட்டிய மம்தா பேனர்ஜி" போன்ற உறுதி மிக்க தலைவர்தானே ஒழிய கலைஞரை போல வழ வழா செயல்பாட்டை அல்ல.

 

Post a Comment

<< Home

Powered by Blogger