Rahul Gandhi to be Congress General Secretary?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
பஞ்சாப், உத்தராஞ்சல், உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கட்சிப் பொறுப்பில் இருந்த மூத்த தலைவர்கள் பலர் அரசு பொறுப்புக்கு சென்று விட்டதால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சிப் பொதுச் செயலராக இருந்த ஏ.கே.அந்தோணி ராணுவ அமைச்சராக பதவியேற்றார். அவர் கவனித்து வந்த காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பதவியும் இதனால் காலியாகி உள்ளது. அதே போல், இலாகா இல்லாமல் இருந்து வந்த மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தொழிலாளர் நலத்துறை(தனிப்பொறுப்பு) அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் கவனித்து வந்த காங்கிரஸ் தலைமை அலுவலக பொறுப்புகளும் வேறொருவருக்கு மாற்றித் தரப்பட உள்ளன.
காங்கிரஸ் மீடியா பிரிவின் தலைவர் பதவி மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவகாரங்களை ஜனார்த்தன் திவேதி ஒருவரே பார்த்து வருகிறார். இந்த பொறுப்புகளுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது சோனியாவின் நீண்ட நாள் ஆசை. அதனால், அமேதி தொகுதி எம்.பி.,யும் தனது மகனுமான ராகுலை உ.பி., மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ராகுல் விரைவில் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம். ராகுல் போன்ற துடிப்பான தலைவர்களின் வருகையால் காங்கிரஸ் கமிட்டிக்கு புது ரத்தம் பாய்ச்சப்படும் என்பதில் சந்தேகமில்லை.
"எனக்கு பதவி எதுவும் வேண்டாம், போதிய அரசியல் அனுபவம் பெற்ற பிறகே கட்சியின் உயர் பதவிகளுக்கு வருவேன்" என ராகுல் ஐதராபாத் கட்சிக் கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது
நன்றி : தினமலர்.
1 Comments:
ஏங்க அன்புமணி ஸ்டாலினை திட்டிட்டூ ராகுலை வாழ்த்திட்டே போவியளா? பண்டிட்டு பரம்பரையாச்சே
Post a Comment
<< Home