Wednesday, October 11, 2006

Madurai Central ஓட்டு பதிவு முடிந்தது !!!

Madurai Central தொகுதி இடைத் தேர்தலில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. 65 முதல் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவு காரணமாக மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கௌஸ் பாட்ஷா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில் பன்னீர் செல்வம் உள்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு வீடியோவில் படமாக்கப்பட்டது. மொத்தம் உள்ள 154 வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலமாசி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், திமுக வேட்பாளர் கௌஸ் பாட்ஷா வாக்களித்தார். வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்திலேயே 20 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதயசந்திரன், தென் மண்டல காவல்துறை ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோர் சென்று சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயசந்திரன் பேசுகையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

வாக்குச் சாவடிகளுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ், தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார், வெளி மாநில போலீஸார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்னர்.

வெளியூர்க்காரர்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே தொகுதியின் எல்லையில் வெளி மாநில போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொகுதி முழுவதையும் அதி விரைவுப் படையினரும் ரோந்து சுற்றி வந்தனர். வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிலேய வாக்காளர்கள் நிறுத்தப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அடையாள ஆவணங்களை காட்டி தங்களது அடையாளத்தை நிரூபித்த பின்னரே வாக்குச் சாவடி உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

இந்த நிலையில் காலை முதல் மாலை விறுவிறுப்பாக நடந்து வந்த வாக்குப் பதிவு 5 மணிக்கு முடிவடைந்தது. 65 முதல் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் அசம்பாவிதம், வன்முறை எதுவும் இல்லாமல் மதுரை மத்திய தொகுதிக்கான இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது Madurai மக்களிடையே நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger