Tuesday, October 03, 2006

Tamil Actor பிரபு அரசியலில் குதிக்கிறார் !!!


முறையான திட்டத்தோடு, முறைப்படி அறிவித்து விட்டு அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

நடிகர் திலகம சிவாஜி கணேசனின் 78வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. புதுவை முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நடிகை வைஜெயந்தி மாலா, கவிஞர் வாலி ஆகியோருக்கு சிவாஜி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கின் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

நகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகர் பிரபுவின் அண்ணனுமான ராம்குமார் பேசுகையில், புதுவையில் காமராஜர் ஆட்சி நடக்கிறது, தமிழகத்திலும் நல்லாட்சி நடந்து வருகிறது. இரு மாநிலத் தலைநகர்களிலும் எங்களது தந்தைக்கு சிலை வைத்துள்ளனர்.

சென்னையில் எங்களது தந்தைக்கு சிலை வைத்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது ஏன் என்று தெரியவில்லை. சிவாஜி இறந்து ஐந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவருடைய சக்தி இன்னும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.எனவே, பிரபுவை ஏன் அரசியலில் இறக்கக் கூடாது என்று நினைக்கிறோம். ஐந்து ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டோம். இனிமேல் அப்படி இருக்க மாட்டோம். பிரபுவை அரசியலுக்கு அழைத்து வருவோம் என்றார்.

பின்னர் பிரபு பேசுகையில், எங்களது தந்தையுடன் பணியாற்றியவர்களுக்கு இங்கே மரியாதை செய்துள்ளோம். புதுவையில் சிலை வைத்த முதல்வர் ரங்கசாமிக்கும், நண்பனுக்கு கடற்கரையில் சிலை வைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் எங்களது நன்றிகள்.

இங்கே எனது தந்தையின் நண்பர்கள், ரசிகர்கள் பெருமளவில் திரண்டுள்ளீர்கள். அந்த தைரியத்தில்தான் அண்ணன் அவ்வாறு பேசினார். எல்லாம் நல்லதாக நடக்கும். நாங்கள் அரசியலுக்கு வரும்போது அதற்கான திட்டத்தோடு, முறைப்படி அறிவித்து விட்டு வருவோம் என்றார் பிரபு.

காங்கிரஸிலிருந்து முன்பு நீக்கப்பட்ட சிவாஜி பின்னர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஜானகி பிரிவு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலில் நின்றார். ஆனால் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் இந்தக் கூட்டணி தோல்வியுற்றது. அத்தோடு தனது அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார் சிவாஜி.

இந் நிலையில் சிவாஜி குடும்பத்திலிருந்து பிரபுவை அரசியலில் இறக்கி விட தீர்மானித்திருப்பது சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவீர்களா என்று பிரபுவிடம் பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? சிவாஜி கணேசன் ரசிகர்கள் இன்னும் கூட ஆக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். சிவாஜி மன்றங்கள் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிவாஜியின் பிள்ளைகள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றார்.

சிவாஜி அரசியலில் தீவீரமாக இருந்தவர் என்றாலும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் சம்பந்தம் செய்தாலும் அவரது வாரிசுகளான ராம்குமாரும், பிரபுவும் இதுவரை அரசியல் சாயம் பூசிக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர்.

இந் நிலையில், முறைப்படி அரசியலுக்கு வருவேன் என்று பிரபு கூறியுள்ளார்.

சிவாஜி ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருகிறோம் என்று பிரபு கூறுகிறார். ஆனால், சிவாஜிக்கே அந்த ரசிகர்களால் அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை நம்பி என்று பொத்தாம் பொதுவாக பிரபு கூறினாலும் அவர் குறி வைப்பது முக்குலத்தோர் சமூக வாக்குகளை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். இருந்தபோது இச் சமூக வாக்குகளை மொத்தமாக அள்ளி வந்தார். இதனால் சிவாஜிக்கே அவர் சார்ந்த முக்குலத்தோரின் ஆதரவு கிடைக்கவில்லை.

சிவாஜி சாதிக்க முடியாததை பிரபு சாதிப்பாரா? முக்குலத்தோர் வாக்குகளை தன் பக்கம் திருப்ப பிரபுவால் முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கார்த்திக்கை நம்பி 'மோசம் போனதாக' கருதும் முக்குலத்து இளைஞர்களுக்கு பிரபுவின் எண்ட்ரி ஒருவேளை புதிய உத்வேகத்தைத் தரலாம்.

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

3 Comments:

At 7:05 AM, Blogger சதயம் said...

எனக்கென்னவோ...பிரபுவை தி.மு.க விழுங்கவே வாய்ப்புகள் அதிகமென நிணைக்கிறேன். பிரபு காங்கிரஸுக்கு போனால் உரிய மரியாதை கிடைக்குமா என்பதும் சந்தேகமே....எனவே என் சாய்ஸ் தி.மு.க தான்

 
At 10:44 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி சதயம்.

பிரபு திமுக வில் சேர்வதே அவருக்கு நல்லது. தனி கட்சி கண்டால் காணாமல் போய்விடுவார்.

 
At 7:00 AM, Anonymous Anonymous said...

என்ன கொடும சரவணன் இது!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger