அதிமுக கூட்டணியில் கார்த்திக்
தட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள செய்தி ...
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் கார்த்திக் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.
தமிழக பார்வர்டு பிளாக் கட்சி தலைவரான கார்த்திக் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற முயன்றார். இதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன், மதுரை ஆதீனம் ஆகியோர் தீவிரமாக முயன்றனர்.
நடராஜனின் உதவியால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பேசப் போன கார்த்திக்க்கு போயஸ் கார்டனில் நோஸ்கட் தான் கிடைத்தது. கூடவே பார்வர்ட் பிளாக் பிரிவுத் தலைவர் சந்தானத்தை வைத்துக் கொண்டு பேசிய ஜெயலலிதா, 2 சீட் தர்றேன். ஒன்று சந்தானத்துக்கு இன்னொன்று உங்களுக்கு என்றார்.
மேலும் சந்தானத்துடன் இணைந்து தான் செயல்பட வேண்டும் என்று கார்த்திக்குக்கு உத்தரவும் போட்டு நாலு திட்டும் திட்டி அனுப்பினார். இதையடுத்து தனித்துப் போட்டி என்று இறங்கி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார் கார்த்திக். இவரை நம்பி போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். இதையடுத்து செல்லாகாசானார் கார்த்திக்.
இந் நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் பாடம் பயின்ற ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிரான ஓட்டுக்கள் எந்த வகையிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார். விஜய்காந்தை வளைக்க ஒரு பக்கம் முயற்சி நடந்தாலும் அவர் பிடி கொடுக்கிற மாதிரி இல்லை.
இதனால் கார்த்திக்கை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு கொண்டு போகும் வேலையில் நடராஜன் தீவிரமாகியுள்ளார்.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நெல்கட்டும்சேவல் பகுதியில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவை நடத்தினார் நடராஜன். இதில் கார்த்திக்கையும் கலந்து கொள்ளச் செய்து அசத்தினார்.
அப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இணையும்படி கார்த்திக்கை நடராஜன் வற்புறுத்தியதாக கூறுப்படுகிறது. இதற்கு கார்த்திக்கும் ரெடியாகிவிட்டதாகத் தெரிகிறது.
தனது தன்மானத்துக்கு பிரச்சனை வராத வகையில் நடப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று கார்த்திக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஜெயலலிதாவின் அனுமதியுடனேயே நடராஜனை கார்த்திக் வளைத்து வருகிறார் என்பதால் விரைவில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் படலம் நடக்கும் என்று தெரிகிறது.
வரும் 13ம் தேதி தனது பிறந்த நாள் விழாவின்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று தெரிகிறது.
Thatstamil.com