
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதிய கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் எண்ணிக்கைக்கு இணையாக கட்டடவிதிமீறல் பிரச்சினைகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
புதிய வீடுகட்டும் அனைவரும் கட்டடவிதிகளை மீற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவது கிடையாது.
கட்டட விதிகள் என்ன? அவை எதற்காக உருவாக்கப்பட்டன? என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததே பல்வேறு விதிமீறல் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்.
புறநகர்ப் பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நில விற்பனை நடந்த காலம் மாறி தற்போது சதுர அடி கணக்கில் நில விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளிலும் புதிய கட்டடங்களுக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழுமத்தின் சார்பிலேயே புறநகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளும் புதிய கட்டடங்களுக்கான அனுமதியை வழங்குகின்றன.
புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது எப்படி: புதிய கட்டடங்கள் கட்ட தேவையான அனுமதி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விவரம்:
(1) புதிய கட்டடத்துக்கான மாதிரி வரைபடத்தின் (புளூ பிரின்ட்) 5 பிரதிகள்.
(2) நிலத்தின் உரிமை உங்களிடம் உள்ளதை நிரூபிக்கும் நிலத்தின் பத்திரங்களின் நகல்.
(3) சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ள "பி' படிவம். (நிலத்தின் ஒரு பகுதியை தனியாக பிரித்து கட்டடம் கட்டினால் "ஏ' படிவத்தை அளிக்க வேண்டும்).
(4) நிலத்தை வீட்டுமனையாகப் பிரித்ததை உறுதிப்படுத்த அதன் "லேஅவுட்' பிரதி.
(5) புதிய கட்டடம் கட்டுவதற்கான செலவு மதிப்பீட்டுப் பிரதி.
(6) தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் நல நலநிதிக்கு கட்டடத்தின் மொத்த செலவு மதிப்பீட்டில் .03 சதவீதத்தை வரைவோலையாக (டி.டி.) அளிக்க வேண்டும்.
(7) லேஅவுட் வரைபட விண்ணப்பக் கட்டணம் ரூ. 10.
(8) கட்டட வரைபட விண்ணப்பக் கட்டணம் ரூ. 10.
(9) சரிபார்ப்புக் கட்டணம் ரூ. 2.
(10) விண்ணப்பப் பதிவுக் கட்டணம். (இது கட்டடம் மற்றும் நிலத்தின் பரப்பளவுக்கு ஏற்ப ரூ. 225 முதல் ரூ. 970 வரை வசூலிக்கப்படுகிறது).
(11) விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம். (இதுவும் கட்டடம் மற்றும் நிலத்தின் பரப்பளவின் அடிப்படையில் ரூ. 75 முதல் ரூ. 3,575 வரை வசூலிக்கப்படுகிறது).
(12) ஏற்கெனவே இருக்கும் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தால் அதற்கு பரப்பளவின் அடிப்படையில் சதுர மீட்டருக்கு ரூ. 55 முதல் ரூ. 90 வரை வசூலிக்கப்படுகிறது.
(13) புதிய கட்டட அனுமதி கட்டணம் பரப்பளவின் அடிப்படையில் 10 சதுர மீட்டருக்கு ரூ. 90 முதல் ரூ. 945 வரை செலுத்த வேண்டும்.
33 அடி அகலத்துக்கு சாலை உள்ள பகுதிகளில் தரைத்தளத்துடன் சேர்த்து 4 மாடி வரை மட்டுமே கட்ட வேண்டும்.
60 அடி சாலை உள்ள பகுதியில் மட்டுமே பலமாடி கட்டடங்கள் கட்டமுடியும்.
புதிய கட்டடங்கள் கட்டும்போது பின்பற்ற வேண்டிய விதிகளில் மிக முக்கியமான இவ் விதிமுறை குறித்து பலருக்கும் தெரியாமல் உள்ளது.
பிரச்சினை என்ன? சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரைதளம் மற்றும் முதல் மாடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு மாநகராட்சியும், புறநகர்ப் பகுதிகளில் அந்தந்தப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளும் சி.எம்.டி.ஏ. சார்பில் அனுமதி அளிக்கும்.
சென்னை மாநகராட்சி மட்டும் புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான விதிகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் மாநகராட்சிப் பகுதிக்கும் புறநகர்ப் பகுதிக்கும் கட்டண விகிதங்களில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன என சிட்லபாக்கம் குடியிருப்போர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
புறநகர்ப் பகுதிகளில் நகராட்சிகளில் ஒரு விகிதத்திலும், ஊராட்சிகளில் ஒரு விகிதமாகவும் கட்டணம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
புதிய கட்டடங்கள் கட்டும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ள அலுவலகங்கள் எதிலும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் உள்ளது.
மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளிப்படையாக இல்லாததால், பல இடங்களில் விவரம் தெரியாமல் வருபவர்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பறிக்கப்படுகிறது.
இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்களால், உண்மையிலேயே அரசின் விதிகள் என்ன என்பது தெரியாமல் தங்கள் விருப்பம் போல் கட்டடங்களை கட்டும் பலர் பின்னர் கட்டட விதிமீறல் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இவ்வாறு, பிரச்சினைகளில் சிக்காமல் தப்பிக்க புதிதாக கட்டடம் கட்டுவோர் இதற்கான விதிமுறைகளை அந்தந்த அலுவலகங்களில் நேரில் சென்று கேட்டுப் பெற வேண்டும்.
இல்லாவிட்டால் வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்படுவதுடன் முறையாக விதிகளை கடைப்பிடித்து வீடுகட்டியுள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
தகவல் : தினமணி