"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 2-ம் பாகத்தை எடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 100 வது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமைதாங்கி ரஜினிகாந்த் பேசியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த "சரஸ்வதி சபதம்' படம் வெளியானது. அதில் கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எது சிறப்பானது என்ற போட்டி வரும். இறுதியில் மூன்றும் முக்கியம் என்ற கருத்து சொல்லப்பட்டது.
இப் படத்தைப் பொறுத்தவரை கதை, எழுதி இயக்கிய சிம்புதேவன் கல்வியையும், பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும் நினைவுபடுத்துகிறார்கள். இந்த மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்ததால் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இப் படத்தின் முதல் பாராட்டு செல்வத்தை வழங்கிய தயாரிப்பாளர் ஷங்கருக்குத்தான். ஏனென்றால் சிம்புதேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு, இக் கதையைத் தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்குத்தான் முதல் பாராட்டு.
அவர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல; நல்ல தயாரிப்பாளரும் கூட. இப் படம் தயாரான பிறகு படத்தை வெளியிடுவதற்காக ஷங்கர் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக அவருடைய வீட்டை அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஷங்கருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒரு சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை அடகு வைத்துவிடக் கூடாது.
அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக வியாபாரம் ஆகிவிடும். ஆனால் சின்ன வயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க உடனடியாக வியாபாரம் ஆகிறது.
அதற்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதமும் அடங்கியிருக்கிறது. ஷங்கரைப் பற்றி இன்னும் விரிவாக "சிவாஜி' வெற்றி விழாவில் பேசுகிறேன்.
அதேபோல் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இயக்குநர் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்கு மிகச் சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அவரிடம் 100 படங்களை இயக்கிய அனுபவம் தெரிகிறது.
இது வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல; சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் உள்ளடக்கிய படம். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் 10 கட்டளைகள் சம்பந்தப்பட்ட காட்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதுபோன்ற படங்களை அவர் இயக்க வேண்டும். ஏன் இதே கூட்டணி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
இப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை "வீரபாண்டிய கட்டபொம்மன்', "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். நாகேஷின் நடிப்பைப் பார்த்து "சர்வர் சுந்தரம்', "நீர்க்குமிழி', "எதிர் நீச்சல்' போன்ற படங்கள் அமைந்தன.
அதுபோலத்தான் வடிவேலுவுக்கு "இம்சை அரசன்...' படம் அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டு படிப்படியாக முன்னேறியவர். அதுபோல தொழிலில் அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர் என்றார் ரஜனிகாந்த்.