நடிகர் ராமராஜனுக்கு முகத்தில் வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள ஒரு Ayurveda Hospital லில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இயக்குநராக இருந்து வந்த ராமராஜன், நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் நடிகராக அறிமுகமானார். எம்ஜிஆர் பாணியைக் காப்பியடித்து அவர் நடித்ததால் கிராமப்புற மக்களிடையே ராமராஜனுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து மிக குறுகிய காலத்திலேயே புகழேணியின் உச்சிக்குப் போனார். கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகு அவர் ரூ. 1 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கினார். கமல், ரஜினியை விட படு டிமாண்ட் மிகுந்த நடிகராக ஒரு காலத்தில் அவர் விளங்கினார்.
நடிகை நளினியை காதலித்து மணந்த ராமராஜன் அவர் மூலம் 2 குழந்தைகளுக்கும் தந்தையானார். ஆனால் இந்த ஜோடி சில காலத்திற்கு முன்பு பிரிந்து விட்டது.
புகழின் உச்சியில் இருந்தபோதே அதிமுகவில் சேர்ந்து எம்பியும் ஆன ராமராஜனுக்கு பின்னர் சரிவு ஏற்பட்டது. திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. அதிமுகவிலும் ஓரம் கட்டப்பட்டார்.
இதனால் வீட்டோடு முடங்கிக் கிடந்த ராமராஜன் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் ராமராஜனுக்கு முகத்தில் வாத நோய் தாக்கியுள்ளதாம். இதையடுத்து அவரை கேரளாவில் உள்ள Ayurveda சிகிச்சை நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு ராமராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Source: Thatstamil.com