தனது சொத்துக்களை விற்று வரும் பணத்தை இசைக்கும், நடனத்திற்கும் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா.
பிரபல நடிகை ஸ்ரீவித்யா சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீவித்யா எழுதி வைத்துள்ள உயில் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஸ்ரீவித்யாவுக்கு உள்ள சொத்துக்கள் குறித்த விவரத்தை அவரது ஆடிட்டர் ராம்மோகன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
திருவனந்தபுரம் பி.டி.பி. நகரில் 8 சென்ட் நலம், அதில் ஒரு வீடு, சென்னையில் ஒரு இடம், ரூ. 15 லட்சம் வங்கி முதலீடு, 180 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளிப் பாத்திரம், தபால் நிலையத்தில் ரூ. 3 லட்சம் டெபாசிட் ஆகியவை ஆகும்.
இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஸ்ரீவித்யா உயிலாக எழுதி வைத்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீவித்யாவின் வழக்கறிஞர் உயிலை வாசித்துக் காட்டினார்.
உயிலில் ஸ்ரீவித்யா கூறியிருப்பதாவது:
எனது சொத்துக்களை எல்லாம் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதிலிருந்து வரும் வருமானத்தை நடனத்துக்கும், இசைக்கும் பயன்படுத்த வேண்டும்.
7 பேர் கொண்டதாக இந்த அறக்கட்டளையை ஆரம்பித்து அதற்கு மலையாள நடிகர் கணேஷ்குமார் தலைவராக இருக்க வேண்டும். எனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்று அந்தப் பணத்தை அறக்கட்டளையில் முதலீடு செய்யும் பொறுப்பை கணேஷ்குமார் செய்ய வேண்டும்.
எனது நீண்ட நாள் ஆசையான இசை நடன பள்ளியைத் தொடங்க வேண்டும். அது முடியாவிட்டால், அங்கீகாரம் உள்ள நிறுவனங்களில் படிக்கும் தகுதி உள்ள நடனம், இசை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் மூலம் உதவ வேண்டும்.
எனது இன்பத்திலும், துன்பத்திலும் கடந்த 20 வருடங்களாக இருந்த உதவியாளர்கள் சித்தம்மா, அவரது கணவர் சகாதேவன் ஆகியோருக்கு தலா ரூ. 1லட்சம் வழங்க வேண்டும்.
எனது சகோதரர் சங்கரராமனின் பிள்ளைகள் 2 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவித்யா தனது உயிலில் கூறியுள்ளார்.
Related Posts:
Kamal Visits Srividya at the HospitalSrividya Admitted in HospitalActress Srividya dies of Heart AttackList of films acted by Actress Srividya