சூரியக் குடும்பத்தில், சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் கோள் எனப் பெருமை பெற்றிருந்த ப்ளூட்டோவின் தகுதிநிலை இப்போது நம்ம ஊர்த் தொலைபேசி எண் அளவுக்குக் குறுக்கப்பட்டு விட்டது!
ப்ளூட்டோ ஒரு கோள் அல்ல என்று எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, "காஸ்மிக்- ஏ' பட்டியலிலிருந்து ப்ளூட்டோவை உலகின் வானியல் அமைப்பு அகற்றிவிட்டதால்தான் இந்த நிலை.
1930-ல் கண்டுபிடிக்கப்பட்ட ப்ளூட்டோவுக்கு இப்போது 134340 ப்ளூட்டோ எனப் பெயர் சூட்டி, சூரியனைச் சுற்றிவரும் 1,36,562 விண்பொருள்களில் ஒன்றாக்கிவிட்டது பாரிûஸத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வானியல் ஒன்றியத்தின் அங்கமான சிறு கோள்கள் மையம்.
செப். 7-ம் தேதி இறுதி செய்யப்பட்ட பட்டியலின்படி, ப்ளூட்டோவின் துணைக் கோள்களான சாரோன், நிக்ஸ், ஹைட்ரா ஆகியனவும் முறையே134340 ஐ, 134340 ஐஐ, 134340 ஐஐஐ என்ற எண்களாகிவிட்டன.
ப்ளூட்டோவை "கோளைப் போன்றதொரு சிறுகோள்' எனக் குறிப்பிட்டு, கோள்களின் பட்டியலிலிருந்து கடந்த மாதத்தில் எடுத்து விட்டது சர்வதேச வானியல் ஒன்றியம்.
இப்போது "கோளை போன்ற சிறுகோள்'களின் பட்டியலை உருவாக்குவதில் முனைந்திருக்கிறது இந்த அமைப்பு.
இப் பட்டியலில் ப்ளூட்டோவுடன் சிரிஸ் மற்றும் தொலைதூர விண்பொருளான 2003யுபி 313 (அதிகாரபூர்வமற்ற பெயர் ஸீனா) இடம் பெறும்.
சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மாநாடு நடைபெறும் வரை சூரியக் கோளின் பத்தாவது கோள் (!) என்பதாக முன்வைக்கப்பட்டு வந்தது "ஸீனா'.
இப்போது பத்து போனதுடன் ஒன்பதாவதுக்கே இடமில்லாமல் போய்விட்டது.
(சூரியனிலிருந்து மிகத் தொலைவில் -க்யூபெர் வட்டப் பகுதியில்- இருப்பதாலேயே ப்ளூட்டோவை அளவிட முடியாமல் இருந்து வந்தது.
1980-களில் "சாரோன்' என்று பெயரிடப்பட்ட -ப்ளூட்டோவின் இணைபொருளை ஜேம்ஸ் கிறிஸ்டி கண்டறிந்ததைத் தொடர்ந்து, இவற்றின் நிழல்களைக் (கிரகணங்கள்) கவனித்ததன் மூலம் ப்ளூட்டோவின் விட்டம் சுமார் 2252 கி.மீ. -பூமியுடைய நிலவின் விட்டத்தை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைவு -என வானியலாளர்கள் அளந்தனர்).
"கோள் போன்றதொரு சிறுகோள்' என்பதற்கான வரையறை அறிவியல்ரீதியாக இல்லை; ப்ளூட்டோ பற்றிய முடிவு நியாயமற்றது' என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர் "எதிர்' வானியலாளர்கள்.
கோள் என்பதற்கான வரையறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தை வலியுறுத்தும் வகையில் அடுத்த ஆண்டு மாநாடு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.
76 ஆண்டு கால பெயரையும் புகழையும் இழந்த ப்ளூட்டோவுக்காக இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
நன்றி : தினமணி