சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் திருமண மண்டபத்தை இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை இறுதி முடிவெடுத்துவிட்டது.
இந்த நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக விஜயகாந்த் கொடுத்த மாற்றுத் திட்டத்தை நிராகரித்து விட்டதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அருகே விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்அழகர் திருமணம் மண்டம் உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் ஏற்படும் பயங்கர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அங்கு அடுக்கு மாடி மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
இதனால் இந்த மண்டபத்தின் ஒரு பகுதி இடிபடவுள்ளது. இதற்கு விஜய்காந்த் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து மேம்பாலத்தை வேறு மாதிரி கட்டலாம் என்று ஒரு 'பிளான்' தந்தார்.
மேலும் தனது வழக்கறிஞர் மூலம் அதே பிளானை தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமும் தந்தார்.
இந்த மாற்றுத் திட்ட பிளான் குறித்து பரிசீலிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பாலுவிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் அமைப்பின் பொறியாளர்கள் அந்த பிளானை ஆய்வு செய்தனர். ஆனால், விஜய்காந்த் தந்த அந்த மாற்றுத் திட்டம் சரி வராது என்று பொறியாளர்கள் கூறிவிட்டனர்.
இந் நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் டி.ஆர்.பாலு. அவர் கூறுகையில், கோயம்பேட்டில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அடுக்கு மேம்பாலம் கட்டவுள்ளது. இத்திட்டத்தால் 168 கட்டடங்கள் பாதிக்கப்படும். இதில் விஜயகாந்த் திருமண மண்டபமும் ஒன்று.
தற்போது அந்த திருமண மண்டபம் விஜயகாந்த்தின் மனைவி பெயரில் உள்ளது.
இதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் வெளியிட்டது. அப்போது விஜய்காந்த் தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், பின்னர் அந்த மண்டலத்தின் வருவாய் அதிகாரி தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்ட விதிகளின்படி மண்டபத்தின் ஆவணங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பியவுடன் விஜய்காந்த் தரப்பில் இருந்து ஒரு வழக்கறிஞர் வந்து ஆஜரானார்.
அந்த வழக்கறிஞர் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்று வரைபடம் (பிளான்) ஒன்றைத் தந்தார் விஜய்காந்த். அந்தப் படத்தில், பாரிமுனையிலிருந்து பாடி செல்வதற்கான பாதையே இல்லை.
மேலும், 40 மீட்டர் ரேடியஸ் அளவும் இல்லை. இது சாலை விதிகளின் தரத்திற்கேற்ப இல்லை. எனவே அந்த மாற்றுத் திட்டத்தை ஏற்க முடியாது என தேசிய நெடுஞ்சாலைத்துறை காங்கிரஸ் கூறிவிட்டது.
இன்னும் 3 வாரத்தில் கோயம்பேடு அடுக்கு மாடிப் பாலம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன என்றார் பாலு.
அப்படியானால் மண்டபம் இடிபடுவது உறுதியாகிவிட்டதா என்று நிருபர்கள் கேட்டபோது, அந்தப் பகுதியில் மக்கள் நலனுக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இடிக்கப்படும் 168 கட்டடங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பாலு பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக பல மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திருச்சியில் ரூ. 248 கோடி மதிப்பிலும், சென்னையில் ரூ. 196 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூ. 136 கோடி மதிப்பிலும், நெல்லையில் ரூ. 122 கோடியிலும், கோவையில் ரூ. 100 கோடி மதிப்பிலும், சேலத்தில் ரூ. 63 கோடி மதிப்பிலும் சாலை மேம்பாடு, புறவழிச் சாலைப் பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
ராமேஸ்வரத்தில் பல்நோக்கு துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதேபோல கொளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு விழா ஜனவரி 17ம் தேதி நடைபெறுகிறது. இதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். 1 வார காலம் இந்த விழா நடைபெறுகிறது என்றார் பாலு.
தகவல்: தட்ஸ்தமிழ்.காம்